கேள்வி: ரெக்ரஷன் செய்யப்படும் அனைவருக்குமே கடந்த கால நினைவுகளை வெளிக் கொண்டுவர முடியுமா? அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒன்றே தான் வழியா?
பதில்; பெரும்பாலோனோருக்கு அவற்றை வெளிக் கொண்டு வருவது சாத்தியமே. எனினும் பலவகையான ஓய்வுநிலை பயிற்சிகளும், தியான நுணுக்கங்கள் மற்றும் கனவுகளிலும் கூட கடந்தகால நினைவுகளை வெளிவரும். முன்னரே குறிப்பிட்டவாறு முதல் முறையே அது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் உறுதியாக கடந்த கால நினைவுகளை சரியான வழிகாட்டுதல் மூலம் நாம் வெளிக் கொண்டுவர முடியும்.
கேள்வி; இந்த செயல்முறையை நான் ஆடியோவை கேட்பதன் மூலம் தனியாக செய்யும்போது ஏதேனும் விரும்பத்தகாதன நிகழுமா?
பதில்; மூத்த மற்றும் அனுபவம் மிக்க மருத்துவர்களின் அனுபவங்களின் படியும் எனது அனுபவத்தின் படியும் பெரும்பாலும் இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஏதேனும் சிரமமாக நீங்கள் உணர்வீர்களானால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்தச் சூழல் மற்றும் காட்சியிலிருந்து துண்டித்துக் கொண்டு, வெளி வந்துவிடலாம். உங்கள் கண்களைத் திறந்து கொள்ளலாம். அத்தோடு அந்த அனுபவம் முடிவுக்கு வந்துவிடும். அதனால், அது உங்களை பொருத்தவரை மட்டுமே. அதனை நீங்கள் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான். ஒன்றில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். இது உங்களது கவனத்தை முழுக்க செலுத்தி செய்யப்படவேண்டிய செயல் முறை ஆதலால் வாகனங்கள் இயக்கும் போதும், கனரக சாதனங்களை கையாளும் போதும் இதுபோன்ற ஆடியோக்களை கேட்காமல் இருப்பது நலம். அது போன்ற சூழல்களை அவசியம் தவிர்த்திடுங்கள்.
கேள்வி; அதாவது மிகுந்த கவன ஒருமுகப்பாடு இந்த பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபிக்கு தேவை என்கிறீர்களா?
பதில்; எந்த அளவுக்கு ஆழமாக தளர்ச்சியும் கவன ஒருமுனைப்பும் இருக்கிறதோ அந்தளவிற்கு இந்த முறையில் பலன்களை பெற முடியும். என்றாலும் ஓரளவுக்கு அவர்கள் தளர்ச்சியும், கவனம் ஒருமுகப்படுத்தலும் இருந்தால் கூட இதில் பலன்களை பெறலாம்.
கேள்வி; இந்த சிகிச்சை முறையில் எந்த வகையான நினைவுகள் வெளிவரக்கூடும்?
பதில்; வழக்கமான வழிமுறையில் ஒரு நபர் கடந்த கால வாழ்க்கைக்கு இட்டுச் செல்லப்படும் போது அந்த வாழ்க்கையின் குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும், அதாவது, அவரை பாதித்துள்ள இன்ப துன்பங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குணப்படுத்துவது ஒரு வகை… இது classical pattern எனப்படுகிறது.
இன்னொரு வகையில் ஒரு துயரர் அவரது தற்போதைய பாதிப்புக்கான நேரடி காரணமாக விளங்கக்கூடிய கடந்தகால வாழ்க்கை நினைவுகளுக்கு மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அந்த நினைவுகள் அவரது நினைவகத்தில் இருந்து வெளிக் கொணரப்படுவது ஆகும். இது key moment flow எனப்படுகிறது.
கேள்வி; எனக்கு அவ்வப்போது கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள் சில, சிறு தருணங்களாக நினைவுக்கு வருவதாக உணர்கிறேன். அது எனக்கு எந்த வகையில் உதவும்?
பதில்; அவ்வாறு உங்களுக்கு ஏற்படும் சிறுசிறு நினைவுகள் தற்போதைய வாழ்க்கை பற்றிய உங்களது அகப்பார்வை மேலும் ஆழமாகவும், ஆன்மா அழிவற்றது மற்றும் மறுபிறப்பு பற்றிய விஷயங்களை உங்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும்.
கேள்வி; இதுபோன்று எனக்குத் தோன்றும் நினைவுகள் உண்மையாகவே நினைவுகளா அல்லது எனது கற்பனையினால் தோன்றும் விஷயங்களா என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
பதில்; அது கற்பனையா அல்லது உண்மையான நினைவுகளா என்பதைப் பற்றி அறிந்து கொள்வது ஒரு சிரமமான காரியமல்ல. என்றாலும் எனது அறிவுரை நீங்கள் எந்தவித முன்கணிப்புமின்றி, ஓய்வாக, ஒரு பார்வையாளராக உங்களுக்குள் நடக்கும் விஷயங்களை கவனிப்பது, உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தினை இயல்பாக உணர உதவும். காலப்போக்கில் உங்களது அனுபவமும் பயிற்சியும் உங்களுக்கு தோன்றுபவை கற்பனையா, ஏதேனும் குறியீடா மற்றும் உண்மையான கடந்த கால நினைவுகளா என்பதை தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.
இந்த நினைவுகளை உறுதிப்படுத்தும் விஷயமாக பல துயரர் சரிதைகளை நாம் இணையதளத்தில் காணலாம். Jenny Cockell என்ற பெண்மணி ஒரு குழந்தையாக இருக்கும்போது தான் அயர்லாந்தில் வாழ்ந்தது போன்ற நினைவுகள் தோன்ற, அவ்விடத்திற்குச் சென்று தனது கடந்த கால வாழ்க்கையில் தனது எட்டு பிள்ளைகளில் 5 பேர்களை சரியாக அடையாளம் கண்டு கடந்தகால வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்து கொண்டது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக, ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு சிலர் கடந்த கால வாழ்க்கையில் தாங்கள் பேசிய மொழியினை, தற்போது இயல்பாக பேசும்போது இதுபோன்று நினைவுகள் உண்மைதான் என்பதை நாம் உறுதியாக உணர முடிவதாக உள்ளது.
கேள்வி; நாம் ஒவ்வொருவருமே மீண்டும் பிறக்கிறோமா?
பதில்; மறுபிறப்பு என்பது நாம் அன்பு, கருணை, பாசம், தயை, அகிம்சை, உள்முக அமைதி, பொறுமை போன்றவற்றினை கற்றுக்கொள்ள நமக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். நாம் உண்மையாகவே அன்பு செலுத்தக் கற்றுக் கொள்ளும்போது இந்த சுழற்சி முற்றுப் பெறுவதாக நான் உணர்கிறேன். எனினும் உயர் நிலை பெற்ற ஆன்மாக்கள் பிறருக்கு கற்பிக்க வேண்டி தாமாகவே மறுபிறப்பினைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
கேள்வி; நாள், வருடம் போன்ற கணக்கீடுகள் இல்லாத காலகட்டத்தை கூட எவ்வாறு அவர்களால் சரியாக கூறமுடிகிறது?
பதில்; அதாவது இந்தச் செயல்பாட்டில் அவர்களது தற்போதைய மேல்மனம் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, பிறகு தான் நம்மிடம் அதனை வெளிப்படுத்துகிறது. ஒரு சிலர் திரைப்படம் பார்ப்பதைப் போல கூட அந்த அனுபவங்களை கண்டு சொல்கிறார்கள். எனவே காலம், நேரம் போன்றவற்றை உணர்ந்த தற்போதைய மேல் மனம்தான் விஷயங்களை அனுபவிக்கிறது. ஆதலால் அந்த காலகட்டத்தை அவர்களால் தெளிவாக கூற முடிகிறது.
கேள்வி; விலங்குகளுக்கும் ஆன்மா உள்ளதா? அவையும் மறுபிறப்பு எடுக்குமா?
பதில்; ஆம் ஒவ்வொரு படைப்புக்கும் ஆன்மா இருப்பதை நமது பழங்கால முனிவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூற்றை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சிகிச்சை முறையின் போது மனிதர்கள் கூட விலங்குகளாக பிறப்பெடுத்திருப்பதையும் பின் விலங்குகள் மனிதர்கள் ஆகப் பிறப்பெடுத்திருப்பது கூட நாம் கண்கூடாக உணர முடிகிறது. சிலவேளைகளில் மரங்கள், செடி கொடிகளாகக் கூட நாம் பிறப்பு எடுக்கிறோம் என்பதையும் எமது சிகிச்சை அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் விலங்கு மற்றும் தாவர வாழ்க்கையின் உணர்வுகளை கூட அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் முடிகிறது. அந்த வாழ்க்கைகளில் இருந்தும்கூட உணர்வுகளை அந்த ஆன்மாக்கள் சுமந்து வருவதையும் நாம் பார்க்க முடிகிறது.
கேள்வி; நமது எதிர்காலத்தை பார்ப்பது சாத்தியமா?
பதில்; எதிர்காலத்தையும் நம்மால் பார்க்க முடியும் என்பது சாத்தியம் தான். சிலர் தாமாகவே கூட எதிர்காலத்திற்கு சென்று விடுவதும் உண்டு. எனினும் மனிதன் தனது சுய விருப்பத்தைக் கொண்டு வாழ்கிறானாதலால் அவனது எதிர்காலம் எப்போதுமே நிலையானதாக, உறுதியானதாக அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. நிகழ்காலத்தில் அவன் தன்னை எந்த அளவுக்கு மாற்றிக் கொள்கிறானோ அந்த அளவிற்கு அவனது எதிர்காலம் மாற்றமடையும் என்பதே உறுதியான ஒரு விஷயமாகும். ஆகையால் எதிர்காலத்திற்கு ஒருவர் என்றால்கூட அவை அப்படியே நடந்தாக வேண்டும் என்பதில்லை என்றாலும் அந்தக் காலகட்டம், வாழ்க்கைச் சூழல்கள் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை நாம் ஓரளவிற்கு தீர்மானமாக பார்க்க முடியும்.
கேள்வி; கடந்த காலத்தை பார்த்துச் சொல்பவர் சிலர் (psychics) இருக்கிறார்கள் அல்லவா? அவ்வாறு அவர்கள் கடந்த காலத்தை பார்த்து சொல்வதற்கும் இந்த சிகிச்சை முறையில் நான் எனது கடந்த காலத்தை அனுபவித்து உணர்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
பதில்; பிறர் நமது கடந்த காலத்தை பார்த்துச் சொல்வது ஒரு சுவாரசியமான விஷயம் தான் என்றாலும் அது உங்களது நோய்க்குறிகள் (symptoms) மற்றும் துன்பங்களைத் (sufferings) தீர்க்க உதவாது. நீங்கள் இந்த சிகிச்சை முறையில் அந்த விஷயங்களை அனுபவித்து உணரும் போது உங்களுக்குள் உறைந்து கிடைக்கின்ற அந்த எண்ணங்களின் தேக்கம் விடுபட்டு நீங்கள் குணமடைவீர்கள். உங்களது அனுபவம் உங்களை ஒரு அற்புதமான கற்றலுக்கு இட்டுச்செல்கிறது. வாழ்க்கை பற்றிய உங்கள் கண்ணோட்டம் மாறுபடுவதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். இதுபோன்ற அனுபவங்கள் மற்றும் பாடங்கள், பிறர் நமது கடந்த கால வாழ்க்கையை படித்துக் (read) கூறுவதால் நமக்கு ஏற்படாது. இது வெறும் வார்த்தையால் புரிந்து கொள்ள இயலாத ஒரு விஷயமாகும். அந்த ஆழ்ந்த மன நிலையில் உங்களது கடந்தகால வாழ்க்கை அனுபவங்களின் பிடியிலிருந்து நீங்கள் விடுபடும் போது, நீங்கள் உணர்வது வேறு வகையில் இருக்கும்.