பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி
( PLRT) என்றால் என்ன?
ஹிப்னாஸிஸ் என்ற நுணுக்கத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிப்போர் தங்களிடம் சிகிச்சை பெறுபவரின் கடந்தகால அல்லது முற்பிறவிகளின் நினைவுகளை மீட்கும் ஒரு சிகிச்சை முறையே பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி எனப்படுகிறது. இது ஒரு ஆன்மீக அனுபவமாகவோ அல்லது ஒரு சிகிச்சை அளிக்கும் வழிமுறையாகவோ நடைபெறுகிறது. மறுபிறவி என்ற கருத்தியலில் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி மற்ற மத வழிமுறைகள் ஒத்துப் போனாலும் போகாவிட்டாலும் கடந்தகால நினைவுகளை மீட்டெடுப்பது என்பது இயல்பாக நடைபெறக்கூடிய ஒரு விஷயமாக, அன்றாடம் நமது சிகிச்சை அறையில் நடைபெறுவதை காண முடிகிறது.
தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்பது அல்லது சில முறைகளை கையாளுவது அல்லது வேறு சில முறைகளிலும் கூட நமது கடந்தகால நினைவுகளை நினைவுக்கு மீட்டுக் கொண்டுவர முடியும். தூண்டும் கேள்விகளுடன் ஒரு துயரர் ஹிப்னாஸிஸ் நிலையில், வழிகாட்டப்படும் போது அவர் கடந்த கால நினைவுகளை, அந்த பாதிப்புக்கே உரித்தான கடந்த கால நினைவுகளை அல்லது அதே போன்றதொரு கடந்த கால அனுபவங்களை நினைவுகளாக வெளிக்கொண்டு வருவதனை நாம் வழக்கத்தில் காணமுடிகிறது.
இந்த வழிமுறையின் மூலம் கடந்தகால வாழ்க்கை அனுபவங்கள், அறிவுத்திறன் மற்றும் உள்ளார்ந்த ஒரு வழிகாட்டுதல்களையும் ஒரு சிகிச்சை அளிப்பவரால் துயரரிடமிருந்து வெளிக் கொணரப்படுகிறது.
அதாவது ஒருமுறை, ஒரு நினைவு நினைவகத்தில் நிறுவப்படும் போது அது எக்காலத்திலும் அழிந்து விடுவதே இல்லை என்பதை இந்த சிகிச்சை முறை உறுதிப்படுத்துகிறது.
பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபிஸ்டுகள் ஹிப்னாஸிஸ் என்கிற நுணுக்கத்தின் மூலம் சிகிச்சை பெறுபவரின் கடந்தகால வாழ்க்கை நினைவுகள் அல்லது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பினை எளிதாக மீட்டுக் கொண்டுவர முடிகிறது. சில சிகிச்சையாளர்கள் கடந்த கால வாழ்க்கை கதைகளை தற்போதைய வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளோடு தொடர்புபடுத்தி அதைப் புரிந்துகொள்கின்ற ஒரு நிலைக்கு மீட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்த சிகிச்சையாளர்கள் கடந்தகால வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் விளைவுகள், தங்கிவிட்ட விஷயங்கள்தான் துயரத்திற்கு காரணம் என்று நம்புகிறார்கள்.
பி எல் ஆர் டி ஏன்?
இந்த சிகிச்சை முறை துயரரின் குணமாக்கல் அனுபவத்தை ஒரு அற்புதமான பயணமாக மாற்றுகிறது. எல்லாவித சிகிச்சை முறைகளையும் முயற்சித்து தனது பிரச்சனை தீராது இருக்கும் நிலையில், இந்த பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி அவருக்கு விடையையும், உள்முகமான வழிகாட்டுதல்களையும் அளிக்கிறது.
இந்த சிகிச்சை, நமது பயம், பயத்தின் விளைவுகள், உறவுச்சிக்கல்கள், உடல்நலச் சிக்கல்கள், ஒரேமாதிரியான எண்ணங்களும் சிந்தனைகளும் தோன்றிக்கொண்டே இருக்கும் ஒரே விதமான செயல்பாடுகளுடன் இருத்தல் போன்ற அனைத்து விதமான குறைபாடுகளையும் தீர்ப்பதில் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது. அவர்களது உணர்வுகள் சமன் படுவதையும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதையும், பயங்கள் குறைவதையும், வாழும் முறையில் பெரிய அளவு மாற்றத்தையும் இந்த சிகிச்சை முறை அவர்களுக்கு உடனடியாக அளிப்பதனை எப்போதும் காணக்கூடியதாக இருக்கிறது. இது ஒரு அற்புதமான குணமாக்கும் வழிமுறையாகும்.
நான் முதன் முதலில் இந்த சிகிச்சை முறையை கையாள ஆரம்பித்தபோது அவர்கள் கற்பனை செய்து கொள்கிறார்களா அல்லது உண்மையானதா என்பதில் குழப்பமுற்று இருந்த போதிலும் அவற்றின் விளைவுகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. தற்போது அவை கடந்த கால நினைவுகளின் விளைவுகள்தான் என்பதை என்னால் உறுதியாக கூற முடிகிறது. இறுதி முடிவை நான் என்னிடம் வந்த துயரர்களின் அனுபவங்களுக்கு விட்டுவிடுகிறேன். உங்களுக்கும் எதிர்காலத்தில் இந்த அனுபவங்கள் கிடைக்கலாம். நீங்களும் கூட சிகிச்சை பெறுவோரின் அனுபவத்திற்கே விட்டுவிட வேண்டியிருக்கும். ஏனென்றால் மறுபிறப்பு பற்றி நம்புபவர்களும், நம்பாதவர்களும் ஹிப்னாஸிஸ் பற்றி நம்புவோர், நம்பாதவர்கள் என பலதரப்பட்ட துயரர்கள் நம்மிடம் வரத்தான் போகிறார்கள். ஆகவே இந்த சிகிச்சை முறையின் செயல்திறனை அவர்களது அனுபவத்திற்கே நாம் விட்டுவிடுவோம்.
***********************
இது எவ்வாறு வேலை செய்கிறது?!
மிக ஆழமாக தளரச் செய்யும் ஹிப்னாஸிஸ் நுணுக்கங்களை பயன்படுத்துவதன் மூலம் கடந்தகால வாழ்க்கை நினைவுகள் வெளிக்கொணரப்படுகின்றன. தனது கடந்த காலத்தை ஒரு பார்வையாளராக இருந்தும் அவரால் பார்க்க முடிவதனை நமது அன்றாட அனுபவம் உணர்த்துவதாக இருக்கிறது. சிரமப்பட்டு நினைவு கூர்வது என்பது அல்ல. எந்தளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அது சாத்தியப்படுவதில்லை.
மாறாக விஷயங்களை நடக்க விடுவது…. அதன் போக்கில் நடக்க விடுவதே.
சரியான திறனை உடைய ஒரு பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபிஸ்ட் அந்த நினைவுகளை இயற்கையாகவும், எளிதாகவும் வெளிக்கொணரச் செய்கிறார்.
எந்தவித முன் முடிவும், முன்கணிப்பு இல்லாமல் ஒரு செஷன் முடிவடையும் வரை நாம் காத்திருக்க வேண்டியது மிக அத்தியாவசியமான தேவையாகும். எல்லாவிதமான சரிபார்த்தல், உற்றுநோக்கல் போன்ற விஷயங்கள் அனைத்தும் ஒரு செஷன் முடிந்தபிறகே வைத்துக் கொள்ளப்பட வேண்டும். நாம் அவ்வாறு ஒருவேளை இடையே அவற்றை செய்ய நேர்ந்தால் துயரரின் சிந்திக்கும், எடைபோடும் மனம் (critical mind) விழித்துக் கொள்ளக்கூடும். அவ்வாறு எடை போடுகின்ற அந்த மனநிலை, தூண்டிவிடப்பட்ட முற்பிறவி நினைவுகளை எளிதில் மீட்டுக் கொண்டு வருவதனை சிரமம் ஆக்கிவிடக் கூடும் அல்லது தடைப்படுத்திவிடும்.